Friday, April 1, 2011

பாகம் - 14

ஸ்வேதா வீட்டிற்கு வந்தாள்.

யாரிடமும் எதுவும் பேசாமல் தன் அண்ணன் அறையில் அமர்ந்து "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதிக் கொண்டிருந்தாள்.

இரவு பத்து மணிக்கு ஸ்வேதாவின் தங்கை அவள் அம்மா மொபைலை ஸ்வேதாவிடம் நீட்டினாள்.

"ஜெயா லைன்ல இருக்கா". சொல்லிவிட்டு மொபைலை அவள் கையில் கொடுத்துவிட்டு சென்று விட்டாள்.

ஜெயா ஸ்வேதாவிடம் பேசினாள்.

"உன் மொபைல் எதுக்குடி சுவிட்ச் ஆப்ல இருக்கு?". கேட்டாள்.

ஸ்வேதா அழுதாள்.        

"சாயந்தரத்துல இருந்து மனசில ஏதோ உறுத்திட்டே இருந்துது. காலைல வீட்டு வாசல்ல நீ உக்காந்திருந்தத நினைக்கும் போது ஏதோ தப்பா நடக்குதுன்னு நினச்சு ரொம்ப நேரமா உன் நம்பருக்கு ட்ரை பண்ணிட்டே இருந்தேன். மொபைல் ஆப் ஆகியே இருந்துது. அதான் சித்தி நம்பருக்கு கூப்டேன். 

என்னடி ஆச்சு உனக்கு?"

ஸ்வேதா அக்காவிடம் அன்று மாலை வரை நடந்த அனைத்தையும் சொல்லி அழுதாள். 

ஆனால் ராகுல் மீது தவறே இல்லாததுபோல் பேசினாள். 

தன் கணவனை வீட்டில் உள்ளவர்கள் குறைவாக நினைத்துவிட கூடாதென்று நினைத்தாளோ? இந்த நினைப்புக்கு அவன் தகுதியானவன் தானா?

"அவனை சென்டிமென்ட்டா பேசி வீட்ட விட்டு வெளில விடாம வச்சிருக்காங்கடி. செத்து போயிரலாமான்னு தோனுதுடி". ஸ்வேதா மருந்து வாங்கி வைத்திருப்பதை சொல்லி அழுதாள்.
"உனக்கென்ன பைத்தியமா? இதென்னமோ விளையாட்டுத்தனமா இருக்கு. நீ உன் வாழ்க்கைக்காக போராடினா கூட நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன். ஆனா சூசைட் அது, இதுன்னு ஏதாவது பண்ணினா உன்ன திரும்பி கூட பாக்க மாட்டேன். 

மரியாதையா அந்த ரேட் கில்லர எடுத்து வெளில போடு. 

அவன் வீட்ல மட்டும் இல்ல. நம்ம வீட்லயும் நிறைய பிரச்சனை ஆகும். அத எப்படி சமாளிக்கிறதுன்னு யோசி. அத விட்டுட்டு லூசு மாதிரி எதுவும் யோசிச்சிட்டு இருக்காத.

அவனோட வீட்ல பேசி சம்மதம் வாங்க வேண்டியது அவனோட பொறுப்பு. அதுல நீ தலையிடாத.

இந்த நேரத்துல ரொம்ப நேரம் பேசினா வீட்ல டவுட் வரும். நான் வைக்கிறேன். எல்லாம் நேர்ல பேசலாம்".

போன் துண்டிக்கப்பட்டது.

ஸ்வேதாவிற்கு மூச்சு திணறியது. மனதில் இருக்கும் பாரம் அவளை சரியாக சுவாசிக்க விடவில்லை. அவள் சாப்பிடும் எதுவும் உள்ளே இறங்குவதும் இல்லை.

இரண்டு நாட்களுக்குப் பின் அம்மா அவளிடம் கேட்டாள்.

"உனக்கு என்னதான் பிரச்சனை? மூச்சு விட கூட ஏன் இப்படி திணர்ற? ஒழுங்கா சாப்டுறது இல்ல. சாப்டா உடனே வாமிட் பண்ணிற. உன் மனசில அப்படி என்னதான் இருக்கு?".

ஸ்வேதா பதில் எதுவும் சொல்லவில்லை.

என்றும் இல்லாத விசேஷமாய் அன்று அலுவகலம் கிளம்பியதும் அம்மாவை தன்னுடன் பஸ் ஸ்டாப் வரும்படி அழைத்தாள்.

அம்மா சென்றாள். ஸ்வேதா பஸ் ஸ்டாப்பில் கண்கலங்கி நின்றாள்.

"எல்லாத்தையும் ஏன் இப்படி மனசிலேயே வச்சு கஷ்டபடுற? பேசாம உன்ன கவுன்சிலிங் கூட்டிட்டு போலாமான்னு பாக்குறேன். அப்போதான் நீ சரியா வருவ". அம்மா சொன்னாள்.

ஸ்வேதா கண்களில் தேங்கிய கண்ணீரை அம்மாவிடமிருந்து மறைக்க வேறு பக்கமாக திரும்பி நின்றாள்.

அம்மா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.       

அன்று இரவு ஸ்வேதா மொபைல் கான்பரன்ஸில் மீண்டும் நண்பர்களோடு இணைந்தாள்.

ஸ்வேதா தன் நிலையை சொல்லி புலம்பினாள்.

"நான் இப்போ என்னடா பண்றது? எனக்கென்னவோ ராகுல் வீட்ட விட்டு வெளில வருவான்னு நம்பிக்கையே இல்லடா".

"ஒரு மாசத்துக்கு மேலல்லாம் ஒரு பையனால வீட்ல இருக்க முடியாது ஸ்வேதா. இப்போ ஒரு வாரம் தான ஆயிருக்கு. ஒரு மாசம் வரைக்கும் வெயிட் பண்ணலாம்". ஜேக்கப் சொன்னான்.

"அதுக்கப்பறமும் வரலைனா?". ஸ்வேதா கேட்டாள்.

"கண்டிப்பா வருவான். அதெப்படி வெளில வராம இருக்க முடியும்? வேலைக்காகவாது வந்துதான ஆகணும்". சிவா சொன்னான்.

"அவனுக்கு ரெண்டு மாசம்தான் நான் டைம் கொடுப்பேன். அதுக்குள்ளே அவன் உன்ன தேடி வரலைனா உங்க பிரச்சனைல நான் தலையிடவே மாட்டேன். அதுக்கப்பறம் அவன் உன்ன மறந்துற வேண்டியதான்". ராஜா கோவமாய் சொன்னான்.

"என்னடா இப்படி சொல்ற?". ஸ்வேதா நண்பனைக் கேட்டாள்.

"இங்க பாருடா ஜேக்கப். இவ நிலமைய புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறா. ராகுல் எப்போ அவன் வீட்டுக்கு கிளம்பினானோ அப்பவே மனசு மாறிட்டான்.

வீட்டுக்கு தனியா போயிராத. நீ போகும் போது நானும் வர்றேன்னு சொல்லிருந்தேன். அன்னைக்கு அவன் கிளம்பினப்ப கூட கேட்டேன்டா. நானும் வரவான்னு. அவன் வேணாம்னு சொல்லிட்டான். அன்னைக்கு அவன் எப்படி பயந்துட்டு பேசினான் தெரியுமா. அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன். இப்படிதான் ஆகும்னு.

ஆனா இவ இருக்காளே. ஐயோ.. ரெண்டு நாளைக்கு முன்னாடி என்ன ரொம்ப பயமுறுத்திட்டா. அம்மாவுக்கு லெட்டர் எழுதிட்டு இருக்கேன்னு சொல்றா. அழவும் மாட்டேங்கிறா. தல சுத்துதுன்னு சொல்றா. என்னென்னவோ பேசுறா. நான் உண்மையிலேயே ரொம்ப பயந்துட்டேன் ஜேக்கப்.

இவளுக்காக ஒரு பிளான் போட்டு கொடுத்தேன். அதுவும் வொர்க் அவுட் ஆகல.

இன்னைக்கு காலைல நாலு மணிக்கு எந்திரிச்சு உக்காந்து யோசிச்சிட்டு இருக்கேன். இந்த புள்ள இப்படி புலம்பிட்டு அலையிறாலே. இவளுக்கு என்ன பண்ணலாம்னு.

நீயே சொல்லுடா. இந்த பிரச்னைக்கு என்ன பண்றதுன்னு?". ராஜா ஜேக்கப்பிடம் கேட்டான்.

ஜேக்கப் யோசித்தான்.

"நாம அதிரடியா என்ன முடிவு வேணும்னாலும் எடுக்கலாம். ஆனா ராகுல் குடும்பம் ரொம்ப அமைதியான குடும்பம். எந்த வம்பு, தும்புக்கும் போக மாட்டாங்க. அதனாலதான் யோசிக்கிறேன். இப்போ அவங்களும் பிரச்சன பண்றவங்களா இருந்தா நாம என்ன வேணாலும் பண்ணலாம்". ஜேக்கப் சொன்னான்.

"என்னால ராகுல் வீட்ல போய் பேச முடியும். ராகுல் அப்பாட்ட நிறைய கேள்வி கேக்க வேண்டி இருக்கு. ஆனா நான் அப்படி கேட்டுட்டேன்னா அதுக்கப்பறம் அவரு உயிரோட இருக்க மாட்டாரு. அதெல்லாம் தாங்கிக்கிற சக்தி அவருக்கு கிடையாது. அதான் அமைதியா இருக்கேன்.

ஆனா ராகுல் கிட்ட நிறைய கேக்க வேண்டி இருக்கு. அவன் சென்னை வரட்டும். நான் பேசிக்கிறேன்". ராஜா சொன்னான்.

"அப்படி என்னடா கேக்க போற?". ஸ்வேதா புரியாமல் கேட்டாள்.

"அத உன்கிட்ட சொல்ல முடியாது. அவங்கிட்டதான் கேக்க முடியும்.

அவன் தப்பு பண்ணிட்டான்டி. மத்தவங்க கதை வேற. உங்க கதை வேற.

இதே பிரச்சன வேற யாருக்காவது வந்துருந்தா நான் தலையிட்டுருக்கவே மாட்டேன். உன் இடத்துல வேற ஒரு பொண்ணு இருந்துருந்தா அவனுக்காக இப்படி வருத்தபட்டுருக்க மாட்டா. போய் தொலன்னு விட்டுட்டு போயிருப்பா.

ஆனா ராகுல் இடத்துல வேற ஒரு பைய்யன் இருந்துருந்தா உன்ன வச்சு தாங்கிருப்பான்டி. உன்ன இப்படி விட்டுட்டு போயிருக்க மாட்டான். உன்ன ராகுல் மிஸ் பண்றான் ஸ்வேதா. அவன் ஒரு முட்டாள். 

நீ நல்லவடி. உன்ன போய் இப்படி பண்ணிட்டானே. 

ஆனா ஒன்னு. உனக்கு அவன உன் பிடில வைக்க தெரியல". ராஜா சொன்னான். 

"என்னடா என் பிடில வைக்க தெரியல?". ஸ்வேதா கேட்டாள்.

"அவனை உன் மேல பைத்தியமாக்கிருக்க வேண்டாமா. நீ அவனை ரொம்ப லூசா விட்டுட்ட".

"நான் ஏன்டா அவன என் பிடில வைக்கணும்? அந்த அவசியம் எனக்கு இல்ல. ஆனா அவன் என்மேல பைத்தியமா இருக்கேன்னு சொன்னானேடா". ஸ்வேதா கலங்கிபோய் சொன்னாள்.

"சரி விடு. அவன் என்கிட்ட ஒரு மணி நேரம் பேசினா கூட போதும். அவனை நான் தெளிய வச்சிருவேன். அவன் சென்னை வரட்டும். 

சரி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க பேசுங்க. நான் கிளம்புறேன்". ராஜா விடை பெற்றான். 

ஜேக்கப், சிவா இருவரும் தொடர்பில் இருந்தனர். 

"சிவா நீ என்ன நினைக்கிற?". ஜேக்கப் கேட்டான். 

"ராஜா சொன்னது சரிதான். ராகுல்கிட்ட கொஞ்சம் தனியா பேசினா போதும். எல்லாம் சரி ஆயிரும். அவன் எனக்காவது போன் பண்ணலாம்ல?". சிவா சொன்னான்.

சிறு வயதிலிருந்தே ராகுலுக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் சிவாவிடம் தானே சொல்லுவான். இப்போது ஒரே ஊரில் இருந்து கொண்டு அவனை கூட தொடர்பு கொள்ளவில்லையே என்ற வருத்தத்துடன் சிவா பேசினான்.

"அவனதான் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காங்களே. அப்பறம் எப்படி உன்ன காண்டக்ட் பண்ணுவான்". ஸ்வேதா சொன்னாள்.  

"சும்மா ஹவுஸ் அரெஸ்ட்டுனு சொல்லாத. கேக்கவே அசிங்கமா இருக்கு. இவன் என்ன பொட்ட புள்ளயா? வீட்ல அடச்சு வைக்க? இவன் ஏன் இப்படி பண்றான்னே புரியல.

அவன் தெளிவா இருந்தா நாம என்ன வேணாலும் பண்ணலாம். நம்ம ஊர் கவுன்சிலர் கிட்ட பேசி, அவர் மூலமா அவன் குடும்பத்த ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வரலாம். ஆனா இவன் தெளிவா இல்லையே. அங்க வந்து என் குடும்பம் தான் முக்கியம். நான் பண்ணது தப்புதான். ஆனா இப்போ இவள கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. அவன் வீட்ல உள்ளவங்களும் காசு கொடுத்து கேஸ் எதுவும் இல்லாம பண்ணிருவாங்க. அப்பறம் இவ அவன கல்யாணம் பண்ணியும் வேஸ்ட் தான்.

அதனால நாம இப்போ கொஞ்சம் பொறுமையாதான் இருக்கனும். அதிரடியா எதுவும் யோசிக்க வேண்டாம்". ஜேக்கப் சொன்னான். 

"என்னால முடியலடா. டெய்லி அம்மா என்கிட்ட கேக்குறாங்க. ஏன் ஒரு மாதிரியா இருக்க? உனக்கு என்னதான் பிரச்சனைன்னு. என்னால நிம்மதியா மூச்சு கூட விட முடியலடா. ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம எங்க வீட்ல சொல்லிறவா?".

"அந்த தப்ப மட்டும் பண்ணிராத. உங்க வீட்ல சப்போர்ட் பண்ணினா பிரச்சனை இல்ல. அவங்களும் முடியாதுன்னு பிரச்சன பண்ணினா ரொம்ப கஷ்டமாயிரும்.  உனக்கு கஷ்டமா இருந்த உடனே எனக்கு போன் பண்ணு. என்கிட்ட சொல்லாம உன் வீட்ல இத பத்தி பேசிறாத. புரியுதா?".

"சரிடா".

பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்வேதாவின் அம்மா வெளியே வந்தாள்.

"யார்கிட்ட இவ்ளோ நேரமா பேசிட்டு இருக்க?". கேட்டாள்.

"பிரண்ட்ஸ் கிட்ட தான். இங்க ஒரு பெரிய கதை போயிட்டு இருக்கு". ஸ்வேதா விளையாட்டாய் சொன்னாள்.

"நீ என் கதையை பெரிய கதையா ஆக்கிருவ போலருக்கு". அம்மா சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

ஸ்வேதா நண்பர்களிடம் சொன்னாள்.

"அம்மாவுக்கு என்மேல சந்தேகம் வந்துருச்சு. இதுவும் ஒரு விதத்துல நல்லதுதான். சந்தேகத்தோட இருந்தாதான் வீட்ல விஷயம் தெரியும் போது அவங்களுக்கு அது பெரிய அதிர்ச்சியா இருக்காது".

"அதுவும் சரிதான். சரி. சிவா, நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நானும் கிளம்புறேன்". ஜேக்கப் விடை பெற்றான்.

"ஸ்வேதா உனக்கு மனசில என்ன தோணுது? ராகுல் என்ன நினைப்பான்னு எனக்கு தெரியும். ஆனா என்ன விட உனக்கு நல்லா தெரிஞ்சிருக்குமே. நீ என்ன நினைக்கிற?". சிவா கேட்டான்.

"எனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா இல்ல".

"என்ன நீ எஸ். ஜே. சூர்யா மாதிரி இப்படி பதில் சொல்ற?".

ஸ்வேதா சிரித்தாள்.

"அவன் மேல எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கோ அந்த அளவுக்கு நம்பிக்க இல்லாமையும் இருக்கு. வீட்ல இருக்கும் போது கண்டிப்பா அவன் மனசு மாறிருப்பான். ஆனா வெளில வந்தா கண்டிப்பா என்ன தேடி வருவான்". ஸ்வேதா சொன்னாள்.

"கரெக்ட். நானும் இதையேதான் நினச்சேன். ஆமா கிட்னேப்பிங் எப்போ நடந்துது?".

இதை கேட்டதும் ஸ்வேதா சிரித்து விட்டாள்.

"ஹே சீரியஸா பேசும் போது ஏன் இப்படி காமெடி பண்ணிட்டு இருக்க?". சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

சிவாவும் சிரித்தான்.

"ஆமா. சொல்லாம கொள்ளாம வீடு வந்து தூக்கிட்டு போயிட்டாங்க. அப்பறம் வேற எப்படி கேக்குறது?".

"ஒரு கரப்பான் பூச்சிய தூக்கினா கூட அது கை, கால ஆட்டும். ஆனா இவன் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் பண்ணாம எவ்ளோ அமைதியா, அடங்கி போயிருக்கான் பாத்தியா". ஸ்வேதா சொன்னாள்.

"அவன் வீட்ட விட்டு வெளில வற ஒரு வழி இருக்கு".

"என்ன?". ஸ்வேதா ஆர்வமாய் கேட்டாள்.

"அவங்களே மாதிரி நாமலும் அவனை வெளில கடத்திட்டு வரனும். பிரண்ட்ஸ் நாலு பேர் சேர்ந்து ஒரு சுமோ ஒன்னு புடிச்சு அவங்க வீட்டுக்கு போகனும். இதுல முக்கியமான விஷயம் என்னென்னா யாரும் வண்டிக்குள்ள இருக்க கூடாது. நாலு பேரும் டோருக்கு வெளில நிக்கதான் செய்யனும், எல்லாரோட கைலையும் ஒரு அருவாள் இருக்கனும். ராகுல் வீட்டுக்கு போறோம். அவனை தூக்கிட்டு வந்து வண்டில ஏத்துறோம். நிக்காம உடனே அங்க இருந்து கிளம்பி உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறோம். மறந்து கூட அவன் வீட்டு முன்னாடி ரெண்டு நிமிஷம் நின்னுர கூடாது. அப்பறம் அவன் மனசு மாறிருவான்". சிவா அழகாக நகைச்சுவையாய் ஒரு கதை சொன்னான்.

சிவா சொல்வதை எல்லாம் கற்பனை செய்தபடி ஸ்வேதா சிரித்துக் கொண்டிருந்தாள்.

"நீ ஒன்னும் கவலை படாத ஸ்வேதா. அவன் உன்ன தேடி வருவான்.

திங்கட் கிழமை அவன கூட்டிட்டு போனாங்க. அதுக்கு முந்தின நாள் நைட் கூட என்கிட்ட சொன்னான். என்ன ஆனாலும் சரி. ஸ்வதாவ நான் விடுறதா இல்ல. வீட்ல ஒத்துக்கலனாலும் பரவால்ல, நான் அவளை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னான். ஒன்னு வேணும்னா இன்னொன்ன இழந்துதான் ஆகனும்னு என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கான். அவன் அப்பாவுக்கு ஏதாவது ஆனாலும் கூட பரவால்ல. அதுக்காக அவளை விட மாட்டேன்னு  சொன்னான். அதனால நீ தைரியமா இரு". சிவா ஸ்வேதாவிற்கு ஆறுதல் சொன்னான்.

நண்பர்களிடம் பேசியது ஸ்வேதாவிற்கு கொஞ்சம் மன ஆறுதலைத் தந்தது.

ஸ்வேதா வீட்டிற்குள் சென்றாள்.

அங்கே ஸ்வேதாவின் அம்மா மதுரையில் இருக்கும் அவள் அண்ணன் மகள் சீமந்தத்திற்கு போவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.

"எப்போ மதுரை போறீங்க?". ஸ்வேதா அம்மாவிடம் கேட்டாள்.

"ஏன்? நீ எங்கயாவது போறதுக்கு பிளான் பண்ணிருக்கியா?". அம்மா கேட்டாள். 

"அவனே இல்ல. அப்பறம் நான் யார்கூட போறதுக்கு பிளான் பண்றது". மனதிற்குள் நினைத்துக் கொண்டு அம்மாவிடம் சொன்னாள் "நான் எங்க போக போறேன்?".

அம்மா பதில் சொல்லவில்லை. 

அன்று இரவு அம்மா, ஸ்வேதாவின் தங்கையிடம் தங்கம், வெள்ளியின் விலை உயர்வைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். 

"இப்போ வெள்ளி கூட வாங்க முடியாது போலருக்கே". அம்மா சொன்னாள். 

ஸ்வேதா அவள் விரலில் உள்ள மோதிரத்தைப் பார்த்தாள். அது ராகுல் அவள் விரலில் போட்ட வெள்ளி மோதிரம். ஸ்வேதா மனதில் என்ன நினைத்தாலோ தெரியவில்லை. அவள் விரலைக் காட்டி அம்மாவிடம் சொன்னாள். 

"இது கூட வெள்ளிதான்".

"வெள்ளியா? நான் இது மெட்டல்னு நினச்சிட்டு இருந்தேன். நீ எப்போ வெள்ளில மோதிரம் வாங்கின? என்கிட்ட ஏன் சொல்லல? எங்க வாங்கின?". அம்மா கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.

"ஐயோ. நானே வாய் கொடுத்து மாட்டிக்கிட்டேனே". ஸ்வேதா மனதிற்குள் நினைத்தாள்.

ஸ்வேதா ஏதோ ஒரு கடையின் பெயரைச் சொல்லி அங்கே வாங்கினேன் என்று பொய் சொன்னாள். 

"நீ என்கிட்ட நிறைய மறைக்கிற". சொல்லிவிட்டு அம்மா அவளைப் பார்த்து முறைத்தாள்.

பிரச்சனை இதோடு முடியவில்லை. மறுநாள் காலையும் தொடர்ந்தது. 

ஸ்வேதா டிவியில் பாட்டு பார்த்துக்கொண்டே அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். 

அம்மா திட்டினாள்.

"படத்துல மட்டும் தான் ஓடிப் போறவங்க ஒரே பாட்டுல கல்யாணமும் பண்ணிக்கிட்டு, வாழ்க்கையிலையும் முன்னேறிருவாங்க". 

ஸ்வேதா டிவி சேனலை மாற்றினாள். அங்கேயும் ஒரு காதல் பாட்டு தான் ஓடியது.

"வெளிநாட்டுகாரி துணி துவைக்கிரவனை காதலிக்கிறா. நிஜத்தில இப்படியெல்லாம் நடக்குமா?". அம்மா நிறுத்தாமல் திட்டினாள்.

ஸ்வேதா டிவியை ஆப் பண்ணிவிட்டு "நமச்சிவாய" பாடலை போட்டாள்.

அம்மா அமைதியானாள். 

மறுநாள் ராஜா ஸ்வேதாவிடம் பேசினான்.

"சாரி டி. நேத்து கொஞ்சம் வேலை இருந்துது. அதான் கிளம்பிட்டேன்". சொன்னான்.

"பரவால்லடா. ராஜா, எனக்கென்னவோ கல்யாணத்துக்கு அப்பறம் என் புருஷன என்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி இருக்குடா. நான் அவனை என் புருஷனாதான நினச்சுட்டு இருந்தேன். அவனும் என்ன பொண்டாட்டின்னு தான்டா கூப்டுவான். இப்போ வீட்டுக்கு போனப்பறம் எல்லாம் மறந்துட்டானா?".

"இந்த மாதிரி நினைப்பு தான்டி உங்க மனசில இருக்கனும். உனக்கு இருக்கு. ஆனா அவன் என்ன நினைக்கிறான்னு தெரியலையே. 

ஸ்வேதா, நீ மணி அண்ணாட்ட பேசுறத மட்டும் நிருத்திறாத. அவங்க மூலமாதான் ராகுல் வீட்ல என்ன நடக்குதுன்னு நம்மளால தெரிஞ்சுக்க முடியும். அன்னைக்கு அவங்க கால் பண்ணப்ப கட் பண்ணி விட்டல்ல. அதுக்கு அவங்க கிட்ட சாரி கேட்டுரு".

"கேக்குறேன்டா. ராஜா, நான் இந்த பிரச்சனைய என் தாத்தாட்ட சொல்லிரலாம்னு நினைக்கிறேன். நான் மொதல்ல தாத்தா வீட்டுக்கு போகனும். நேரம் பாத்து தாத்தாட்ட இத பத்தி பேசனும்". 

"உன் இஷ்டம். இதையும் மணி அண்ணாட்ட சொல்லிரு. விஷயம் ராகுல் வீட்டுக்கு போயிரும்".

ஸ்வேதா மணியிடம் பேசினாள்.

"அண்ணா. அன்னைக்கு நான் போனை கட் பண்ணது தப்புதான். நீங்க அத மனசில வச்சுக்காதிங்க. நான் அன்னைக்கு இருந்த மன நிலைமைல எனக்கு உங்ககிட்ட பேச பிடிக்கல. அதான் கட் பண்ணேன்".

"அது பரவால்ல. ஆனா நீ போனை கட் பண்ணதுக்கு ராகுலோட அப்பா என்ன சொன்னாங்க தெரியுமா?".

"அப்போ நீங்க போன் பண்ணப்ப ராகுல் வீட்லதான் இருந்திங்களா?".

"ஆமா. ராகுல் அப்பா பக்கத்துல இருந்துதான் போன் பண்ணேன். 

அவர்கிட்ட நான் எல்லாத்தையும் சொன்னேன்மா. தப்பு முழுசும் நம்ம பையன்கிட்ட தான் இருக்கு. அந்த பொண்ண நாம தப்பு சொல்ல கூடாதுன்னு சொன்னேன். அதுக்கு அவரு நம்ம வீட்டு பையன எப்படி தப்பு சொல்ல முடியும். அந்த பொண்ணு சாதாரண பொண்ணு இல்லன்னு சொல்றாரு. 

ராகுலும் இவ ஏன் போனை கட் பண்றா. நீங்க என்ன சொல்றிங்கன்னு கேக்கலாம்லன்னு கோவபடுறான். என் இடத்துல இருந்து நீங்க அவகிட்ட என்ன பிரச்சனைன்னு சொல்லிருங்கனு சொல்றான்....".

ஸ்வேதா ராகுலை காதலித்தாளா? இல்லை மணியைக் காதலித்தாளா? காதலித்தவன் தானே அவளுக்கு பதில் சொல்ல வேண்டும். இதில் எங்கிருந்து நுழைந்தார் இந்த மூன்றாவது மனிதர் மணி?

"....நீ ஏன் இவனபோய் லவ் பண்ண? உங்க பிரண்ட்ஸ்ல வேற யாரையாவது நீ லவ் பண்ணிருந்தா இந்நேரம் உன்ன கல்யாணம் பண்ணிருப்பாங்க. இவன நம்பி ஏமாந்துட்டியே. இவன் வீட்ல நடிக்கிறான்மா. அம்மா, அப்பா என்ன சொன்னாலும் தலையாட்டுறான். அவன் அப்பாகிட்ட சொல்லலாம்ல.தப்பெல்லாம் என் மேலதான்னு சொல்லி தைரியமா பேசலாம்ல. இவன்தான் பேச மாட்டேங்கிறானே.

இவன நம்பி நீ ஓடி வந்தாலும், உங்க கல்யாணத்துக்கு அப்பறம் அவன் வீட்ல இருந்து யாரவது வந்து கூப்டா இவன் உன்ன விட்டுட்டு அவங்க கூட வந்துருவான். அப்போ நீ என்ன பண்ணுவ? உன் வாழ்க்கைய நீதான் காப்பாத்திக்கனும்". மணி மனதில் உள்ளதை பேசி முடித்தார்.

"நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அண்ணா. ஆனா எல்லாம் காலம் கடந்து போச்சு. என்னால இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க முடியாது. நானும் அந்த ஊர்ல பிறந்த பொண்ணுதான. மனசில நினச்சவன கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேன். அவனே மாதிரி என்னால பிரச்சனைய பாத்து பயந்து ஓட முடியாது. நான் முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணி பாப்பேன். 

என்னால தனியா போராட முடியல. அதனால நான் என் தாத்தா கிட்ட விஷயத்த சொல்ல போறேன். இனி பெரியவங்க பேசி முடிவு பண்ணட்டும்.இத ராகுல் கிட்ட சொல்லிருங்க".

அன்று இரவு ஸ்வேதா ஊரில் இருக்கும் அவள் பாட்டியிடம் பேசினாள். 

"பாட்டி, எனக்கு வேலைக்கு போக பிடிக்கல. வேலைய விட்டுட்டு கொஞ்ச நாள் உங்க கூட ஊர்ல இருக்கலாம்னு நினைக்கிறேன். நான் அங்க வரவா?". பாட்டியிடம் கேட்டாள்.

"தாராளமா வா. ஆனா உன் மாமா பொண்ணு சீமந்தம் முடிஞ்சதும் வா. விசேஷத்துக்கு நாங்கல்லாம் மதுரை வரோம். அதுக்கப்பறம் வரியா?".

"ஐயோ. அவ்ளோ சீக்கிரமா வர முடியாது. நான் வர இன்னும் ஒரு மாசம் ஆகும்".

"சரிம்மா. சீக்கிரமா வா". 

மறுநாள் ராகுலின் நண்பன் கணேஷ் ஸ்வேதாவிடம் பேசினான். 

"ஸ்வேதா, நேத்து மணி எனக்கு போன் பண்ணிருந்தாரு".

"மணி அண்ணாவா? உங்க நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும்? என்ன சொன்னாங்க?".

மணி கணேஷுக்கு போன் பண்ண என்ன அவசியம் வந்தது? ஸ்வேதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

"நீங்க ஸ்வேதாகிட்ட பேசினிங்கலானு கேட்டாரு. அவ எப்படி இருக்கான்னு கேட்டாரு". கணேஷ் சொன்னான்.

ஸ்வேதாவிற்கு விஷயம் புரிந்தது. அவள் உயிரோடுதான் இருக்கிறாளா இல்லையா என்பதை அறிந்துகொள்ள ராகுல் தான் மணியிடம் சொல்லி கணேஷுக்கு போன் பண்ண சொல்லியிருக்க வேண்டும்.             

"நீங்க என்ன சொன்னிங்க?". கேட்டாள். 

"எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்.அவளை பத்தி தெரிஞ்சு என்ன பண்ண போறிங்கன்னு கேட்டுரலாமானு தோணிச்சு எனக்கு. உன்ன பத்தி கேட்டு அவங்க என்ன பண்ண போறாங்க?". கணேஷ் கோவமாய் கேட்டான்.

"ராகுல் கேக்க சொல்லிருப்பான். அவங்க கேட்டுருக்காங்க. அவ்ளோதான் அண்ணா".

ராகுல் என்னதான் நினைக்கிறான் என்பது யாருக்கும் புரியவில்லை. அவள் வேண்டாம் என்று நினைத்தால், அவள் உயிரோடு இருந்தால் என்ன? இல்லை செத்தால்தான் அவனுக்கென்ன?   

சனிக்கிழமை இரவு அம்மா சொன்னாள். 

"நாளைக்கு சித்தி வீட்டுக்கு போறோம்".

ஸ்வேதாவிற்கு அங்கே செல்ல மனமில்லை. அங்கே சென்றால் அசாதாரணமாக  காணப்படுவோம் என்று நினைத்தாளோ  என்னவோ. 

"நான் கண்டிப்பா வரணுமா? எனக்கு இஷ்டம் இல்லையே". ஸ்வேதா சொன்னாள். 

"போயிட்டு சீக்கிரமா வந்துரலாம்". அம்மா சொன்னாள். 

மறுநாள் சித்தி வீட்டில் ஸ்வேதாவிற்கு உபசரிப்பெல்லாம் பலமாக இருந்தது. அதை சாப்பிடு, இதை சாப்பிடு என்று அன்பு தொல்லைகளும் அதிகமாக இருந்தது. 

ஏதோ பேசிக்கொண்டிருக்கும் பொழுது சித்தி சொன்னாள். 

"நீ கலரா, அழகா இருக்கல்ல. நாலு பசங்க உன்ன பாக்கத்தான் செய்வாங்க. நல்ல சுத்தி போடு". என்றாள்.

இதென்ன சித்தி என்றும் இல்லாத நாளாக இன்று இப்படி பேசுகிறாள்?

மதிய உணவு முடிந்ததும் ஹாலில் ஸ்வேதா, தங்கை, தம்பி, சித்தி மகள்கள் இரண்டு பேர் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது சித்தி ஹாலிற்கு வந்து "ஸ்வேதா கொஞ்சம் இங்க வா" என்று படுக்கை அறைக்கு அழைத்தாள்.

ஸ்வேதா சென்றாள்.

அங்கே ஸ்வேதாவின் அம்மா படுக்கையில் சரிந்து படுத்திருந்தாள்.

சித்தி ஸ்வேதாவை அணைப்பது போல் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு நெருக்கமாக நின்றாள். சித்தி உடம்பெல்லாம் நடுங்கியது. 

"ஸ்வேதா, உன்கிட்ட ஒன்னு கேப்போம், மறைக்காம பதில் சொல்லுமா". சித்தி சொன்னாள். 

"என்ன சித்தி?". ஸ்வேதா புரியாமல் கேட்டாள். 

"நம்ம ஊர்ல இருந்து சித்தப்பாவுக்கு ஒரு போன் வந்துது. நீ ஒரு ஆசாரி பையன காதலிக்கிறதா சொன்னாங்க. அவன் இல்லைனா செத்து போயிருவேன்னு சொன்னதா சொன்னாங்க. இது உண்மையா?". கேட்கும் பொழுது சித்தி உடம்பில் நடுக்கம் அதிகமானது.

ஸ்வேதா அதிர்ந்துபோய் சித்தியைப் பார்த்தாள்.

ஸ்வேதா வீட்டிற்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது? எப்போது தெரிந்தது?



உண்மைக் கதை தொடரும்...



      

    

Thursday, March 31, 2011

பாகம் - 13

சிறிது நேரத்தில் ராஜா ஸ்வேதாவை திரும்ப அழைத்தான். 

"ஸ்வேதா, நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளு. இதுவரைக்கும் நான் சொன்ன எதையுமே நீ கேக்கல. நான் சொன்னத கேட்டுருந்தா ராகுல் உன்ன இப்படி கஷ்ட படுத்திருக்க மாட்டான்".

ராஜா பல வருடங்களாக ஸ்வேதாவிற்கு அறிவுரை சொல்லி வந்தான். ராகுலால் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது. அவனால் வீட்டில் தைரியமாக பேச முடியாது என்பது ராஜாவுக்கு நன்றாகத்  தெரியும். இதை அவளிடம் சொல்லி அவனை அடியோடு மறக்க சொன்னான். ஆனால் அவளால் முடியவில்லை. அதன் விளைவுதான் இப்போது நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும்.

"பழைய பாட்ட பாடாம விஷயத்த சொல்லுடா". ஸ்வேதா ஆவலுடன் கேட்டாள்.

"இப்பவாது நான் சொல்றத சொதப்பாம சரியா பண்ணுவியா?".

"கண்டிப்பா பண்றேண்டா. நீ சொல்லு". பொறுமை இழந்து சொன்னாள்.

"இப்போ நான் மணி அண்ணாவுக்கு போன் பண்ண போறேன். ஸ்வேதா சாக போறேன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு கைல மருந்தோட உக்காந்துருக்கான்னு சொல்ல போறேன்".

"சொன்னா?"

"சொல்றத முழுசா கேளுடி. இடைல பேசினா நான் மறந்துருவேன்".

"சரி சரி. நீ சொல்லு".

"எதுலடி விட்டேன்?"

"மணி அண்ணாக்கு போன் பண்ணி....."

"ம்ம்ம்... நான் அவங்ககிட்ட இப்படி சொன்னதும் அந்த அண்ணன் பதறுவாங்க. அந்த நேரத்துல மொதல்ல போனை கொண்டு போய் ராகுல் கிட்ட குடுங்க. இல்லேன்னா அவ ஏதாவது பண்ணிக்குவான்னு சொல்லுவேன். அந்த அண்ணன் உடனே கிளம்பி ராகுல் வீட்டுக்கு ஓடுவாங்க. ராகுல்கிட்ட இத சொல்லி அந்த அண்ணன் மொபைல இருந்து உனக்கு போன் பண்ணுவாங்க. நீ என்னென்ன பேசனும், திட்டனும்னு நினைக்கிறியோ எல்லாத்தையும் ஒழுங்கா ராகுல் கிட்ட பேசிரு. அவன் பாவம், கஷ்ட படுவான்னு திட்டாம விட்டனு வை அதுக்கப்பறம் கடவுள்தான் உன்ன காப்பாத்தனும். நீ திட்டுற திட்டுல தான் ராகுல் உன்ன பத்தி யோசிப்பான். சோ நாக்க புடுங்கிட்டு சாகுற மாதிரி அவன நீ கேள்வி கேக்கனும். கேப்பியா?"

ஸ்வேதா யோசித்தாள்.

"அவன் குரலை கேட்டாவே நான் அழுதுருவேன்டா. அப்பறம் எப்படி திட்டுறது?"

"இதுதான்டி உன் பிரச்சினையே. அவன் உன்ன பத்தி யோசிச்சானா? நீ ஏன் அவன் கஷ்டபடுவான்னு நினைக்கிற? அவன திட்டுறதா இருந்தா சொல்லு. நான் மணி அண்ணாட்ட பேசுறேன்"

"சரிடா. நான் கண்டிப்பா திட்டுறேன்"

"சரி. ஒரு பேப்பர் எடுத்து நீ என்னென்ன கேக்கனும்னு நினைக்கிறியோ எல்லாத்தையும் எழுது. இல்லைனா நீ அவன்ட பேசும் போது எல்லாம் மறந்துரும். நீ எழுதிட்டு இரு. நான் மணி அண்ணாவுக்கு போன் பண்ணிட்டு வரேன்". சொல்லுவிட்டு ராஜா விடை பெற்றான்.

ஸ்வேதா ஒரு பேப்பர் எடுத்து ராகுலிடம் என்னென்ன கேக்க வேண்டும் என்று நினைத்தாலோ அத்தனையும் எழுதினாள்.

சில நிமிடங்களில் ராஜா அழைத்தான். 

"ஸ்வேதா. மணி அண்ணாட்ட பேசிட்டேன். அந்த அண்ணன் பயங்கரமா டென்ஷன் ஆயிட்டாங்க. இப்போ ராகுல் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்காங்க. நம்ம பிளான் வொர்க் அவுட் ஆயிருச்சுடி. 

உன்னோட புது நம்பர அவங்களுக்கு குடுத்துருக்கேன். அதுக்குதான் கூப்டுவாங்க.

இப்போ நான் சொல்றத தெளிவா கேளு.

மணி அண்ணா நம்பர்ல இருந்து உனக்கு போன் வரும். 

யார் பேசுறாங்கனு பாரு. மொதல்ல மணி அண்ணன் பேசினா ராகுல் எங்கனு கேளு. அவங்க வேற எதாவது பேச ஆரமிச்சா உடனே போனை கட் பண்ணிரு. 

மறுபடியும் உனக்கு கால் வரும். அப்போ ராகுல் அண்ணன் பேசினாலும் பேசுவாங்க. அவங்க குரல் கேட்டா உடனே கட் பண்ணிரு. 

ராகுல் குரல் கேட்டா மட்டும் தான் நீ பேசனும். இப்பவாது நான் சொல்றத அப்படியே செய்டி. ராகுல் கிட்ட தயவு தட்சண பாத்துறாத. அப்பறம் உன் வாழ்க்க போயிரும். 

அப்பறம் ஒரு விஷயம். அவங்க குடும்பமே ஒன்னா உக்காந்து லவுட் ஸ்பீக்கர்ல போட்டு நீ பேசுறத கேட்டாலும் கேப்பாங்க. சோ நீ ராகுல திட்டித்தான் பேசனும். அப்போதான் அவன் என்ன தப்பு பண்ணிருக்கான்னு அவங்க வீட்டுக்கு தெரியும். முக்கியமான விஷயம் அவங்க வீட்ல உள்ள யாரையும் திட்டி பேசிறாத.

எல்லாம் சரியா பேசுவியாடி?".

ராஜா தன் தோழிக்காக ஒரு பெரிய திட்டம் போட்டு கொடுத்தான். 

"கண்டிப்பா பேசுவேன்டா. இவன இப்பவும் கேள்வி கேக்கலைனா எனக்கு ரோஷமே இல்லன்னு அர்த்தம். கண்டிப்பா அவன திட்டுறேன்". 

"சரிடி. நான் வைக்கிறேன். மணி அண்ணா உனக்கு ட்ரை பண்ணிட்டு இருப்பாங்க". சொல்லிவிட்டு ராஜா போனை துண்டித்தான். 

ராஜாவுக்கு தான் தன் தோழி வாழ்வின் மீது எத்தனை அக்கறை. இவனுக்கென்ன தலை எழுத்தா? இவளுக்காக இதெல்லாம் செய்ய வேண்டுமென்று? அப்பறம் ஏன் செய்கிறான்? ஒன்பது வருட நட்பு என்பதினால்தானே. ஒன்பது வருட காதலை விட ஒன்பது வருட நட்பு அவளுக்கு துணையாய் நிற்கிறது. காதலித்தவன் அவன் வேலையைப் பார்த்துக்கொண்டு வீட்டிற்குள் கிடக்கிறான். தோழன் தன் தோழியின் காதலுக்காக போராடிக் கொண்டிருக்கிறான். கண்டிப்பாக காதலை விட நட்பு சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும். 

இந்த காலத்தில் ஒரு பெண்ணைக் கூட குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வீட்டிற்குள் அடைத்து வைக்க முடியாது. ஒரு ஆண் பிள்ளையால் எப்படி இதைபோல் வீட்டிற்குள் அடைந்து கிடக்க முடிகிறது? இதென்ன விசித்திரம்? 

மணியிடமிருந்து ஸ்வேதாவிற்கு அழைப்பு வந்தது. 

ராகுலின் குரலை எதிர்பார்த்து ஸ்வேதா ஹலோ சொன்னாள். 

ஆனால் எதிர் பக்கத்திலிருந்து கேட்டது மணியின் குரல்.

"ராகுல எங்க?". ஸ்வேதா பல்லைக் கடித்துக் கொண்டு கோவமாய்க் கேட்டாள்.         

"நான் அவன் வீட்டுக்கு போனேன்.........". மணி ஏதோ சொல்ல நினைத்து இழுத்து பேசினார். 

ராஜா தான் ராகுலைத் தவிர வேறு யாருடமும் பேச கூடாது. அப்படியே பேசினாலும் உடனே போனை துண்டிக்க வேண்டுமென்று அவளுக்கு கட்டளை போட்டிருக்கிறானே. 

ஸ்வேதா போனை துண்டித்தாள். 

"நான் அவன் வீட்டுக்கு போனேன்" என்றால் இப்போது மணி ராகுலின் வீட்டில் இல்லை என்றுதானே அர்த்தம். ராகுல் பக்கத்தில் இல்லை என்றால் அவள் ஏன் மணியிடம் பேச வேண்டும். 

மணியிடமிருந்து மீண்டும் இருமுறை அழைப்பு வந்தது. 

ஸ்வேதா கோவத்தில் அவர் அழைப்பை துண்டித்து விட்டாள்.         

சிறிது நேரத்தில் ராஜாவிடமிருந்து ஸ்வேதாவிற்கு அழைப்பு வந்தது.

"மணி அண்ணா எனக்கு கால் பண்ணாங்க ஸ்வேதா". ராஜா சொன்னான். 

"எனக்கு பண்ணாங்கடா. நான் கட் பண்ணிட்டேன்".

"அதனாலதான் எனக்கு போன் பண்ணாங்க. அந்த அண்ணன் போய் ராகுல் வீட்ல எல்லாம் சொல்லிருக்காங்க. அவனோட அப்பா பேச விட முடியாதுன்னு சொல்லிட்டாராமா". ராஜா சோகமாய் சொன்னான்.

ஸ்வேதாவிற்கு ராகுல் அப்பா மீது அளவு கடந்து கோவம் வந்தது. உயிர் போகும் நேரத்தில் கூட தன் மகன் காதலித்தவளிடம் அவனை பேச வைக்க ஒரு மனிதர் இப்படி யோசிப்பாரா? அவருக்கு எத்தனை கல் நெஞ்சமாக இருக்க வேண்டும். தன் மகனை பக்கத்தில் வைத்துக்கொண்டே பேச வைக்கலாமே. அவர் அதை கூட ஏன் செய்ய மறுக்கிறார்? தவறு தன் மகன் மீது இருக்கிறது என்று தெரிந்த பின்னும் ஒரு பெண்ணை இப்படி அற்பமாக நினைக்கும் இவருக்கு பிறந்த மகன் மனதில் மட்டும் எப்படி ஈரத்தை எதிர் பார்க்க முடியும். ராகுல் இவருக்கு பிறந்தவன் தான் என்பதை சரியாகத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறான். 

அப்பாதான் முடியாது என்கிறார். காதலித்தவனுக்கு எங்கே போனது அறிவு? தான் காதலித்த பெண் சாக போகிறேன் என்று நிற்கிறாள். அப்பாவிடம் சண்டை போட்டு கடைசியாக ஒரு முறை அவளிடம் பேசிவிடுகிறேன் என்று சொல்லும் தைரியம் கூட இல்லாத, ஒன்றுக்கும் உதவாத கோழையா  அவன்? இவனுக்கெல்லாம் எதற்கு காதல் கத்தரிக்காயெல்லாம்?

பிற்காலத்தில் இவனை நம்பி ஒரு பெண் வருவாளே. அவள் நிலை என்னவாகும்? நாலு திருடர்கள் வந்து வழி மறித்தால் மனைவியை அவர்களிடம் விட்டு விட்டு ஓடி விடுவானா? அவன் இப்போது செய்யும் செயல்கள் அப்படித்தானே இருக்கிறது. 

ராஜா சொன்னதைக் கேட்டு ஸ்வேதாவிற்கு என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

ராஜா மனம் சோர்ந்து போய் பேசினான். 

"மணி அண்ணாட்ட பேசும் போது ராகுல் அண்ணன் போனை வாங்கி பேசினாருடி.

அவ என்னதான்ப்பா சொல்றான்னு கேட்டாரு. 

அவ ஒரே முடிவுலதான் இருக்கா. ஒன்னு ராகுல கல்யாணம் பண்ணுவா. இல்லைனா செத்துருவான்னு சொன்னேன். 

எங்க வீட்ல அப்பா, அம்மா அழுதுட்டே இருக்காங்க. நான் அவங்களதான் பாக்க முடியும். அந்த பொண்ணுகிட்ட சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறா. நான் என்னதான்ப்பா பண்றதுன்னு கேட்டாரு. 

அவ உங்க தம்பிய லவ் பண்ணிருக்கா. அதனால அவ அப்படித்தான் இருப்பான்னு சொன்னேன். 

நீயாவது அவளுக்கு புத்திமதி சொல்லுனு சொன்னாருடி".

"யாருக்குடா வேணும் இவங்க கரிசனம். இவனுக்காக நான் செத்து போயிட்டா அந்த குடும்பமே தொல்ல ஒழிஞ்சதுன்னு சந்தோஷ படும் போலருக்குடா".

"நானும் என்னென்னவோ பண்ணி பாக்குறேன். எல்லாம் தப்பாவே முடியுதுடி". சோர்ந்து போய் சொன்னான். 

ராஜா தொடர்ந்தான். 

"அவங்க ரொம்ப ஜாதி வெறி புடிச்சவங்கடி. நாம +2 படிக்கும் போது நம்ம ஊர்ல அவங்க ஜாதிக்கும், உங்க ஜாதிக்கும் நடுவுல ஒரு பெரிய அடி, தடி கலவரமாச்சு. உனக்கு ஞாபகம் இருக்கா?".

"என்னடா சொல்ற? எங்க ரெண்டு சாதிக்கும் நடுவுலையா? எனக்கு தெரியாதுடா. ராகுல் கூட இத எங்கிட்ட சொன்னதில்லையேடா?".

"நடந்துதுடி. பெரிய கலவரமாச்சு. அதனால கண்டிப்பா அவங்க உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க. ராகுல் தைரியமா வெளில வந்தா கூட ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம். ஆனா அவன் சத்தமே காட்டாம இருக்கான். நாம என்னடி பண்ண முடியும்?".

ஸ்வேதாவிற்கு இந்த ஜாதி கலவரத்தைக் கேட்டதும் மனதில் பெரும் பூகம்பமே வெடித்தது. 

காதலிலே இத்தனை பிரச்சனை என்றால், ஜாதி கலவரம் வந்தால் ராகுல் இந்த நாட்டை விட்டே ஓடி விடுவான். 

இருந்தாலும் ஸ்வேதாவிற்கு தன் காதல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்தாள்.

ஆனால் இவளைப் போல் ராகுலும் நினைக்க வேண்டுமே. இப்போது பிரச்சனையே அதுதானே. 

"இப்போ என்னடா பண்றது?". ஸ்வேதா ராஜாவைக் கேட்டாள். 

"ராகுல் வெளில வரனும். அதுதான் ஒரே வழி".               

ஸ்வேதா அம்மாவிற்கு எழுத தொடங்கிய லெட்டரை தன் கப்போர்டில் வைத்துவிட்டு சோர்ந்து போய் வீட்டிற்கு கிளம்பினாள்.

போகும் வழியில் ஒரு கடைக்கு சென்றாள்.

"Rat killer இருக்கா?" கேட்டாள். 

கடைக்காரர் அவளை ஒரு முறை பார்த்து விட்டு "இல்லை" என்றார். 

அவளின் அழுது வடிந்த முகத்தைப் பார்த்து தர மறுத்தாரா?

மூன்றாவதாக ஒரு கடையில் கேட்டாள். 

கிடைத்தது. 

வாங்கி அதை தன் பையில் வைத்தாள். 

ராகுல் எதற்கும் உதவாதவன் என்று தெரிந்த பின்னும் எதற்காக மருந்து வாங்கினாள்? இதற்கு மேலும் அவனுக்காக உயிரை இழப்பாளா?     



உண்மைக் கதை தொடரும்...




Wednesday, March 30, 2011

பாகம் - 12

ராஜா அழைப்பைத் துண்டித்ததும் ஸ்வேதாவிற்கு தலையே சுற்றியது.

மீண்டும் அழைத்தாள்.

அவன் துண்டித்தான். அவள் துடித்தாள்.

சிறிது நேரத்தில் ராஜாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. 

"ராகுல் என்னடா சொன்னான்? நேத்து அவன்கிட்ட பேசிருக்க. ஏன் என்கிட்ட சொல்லல?" கேட்கும் பொழுதே அவள் குரல் நடுங்கியது. 

"நான் இப்போ சாப்ட போறேன். பத்து நிமிஷம் கழிச்சு கூப்டுறேன்". நிதானமாய்ச் சொன்னான்.

"விஷயத்த சொல்லிட்டு போடா. ஏன் என் நிலமைய புரிஞ்சுக்க மாட்டேங்கிற? நீயும் ஏன்டா என் உயிரை வாங்குற?". பதற்றத்தோடு கேட்டாள்.

"நீ சாப்டியா?" ராஜா சம்மந்தமில்லாமல் கேட்டான். 

"டேய். எனக்கு தல சுத்துது. அவன் என்ன சொன்னான்னு சொல்லித்தொல". கோவமாய்ச்  சொன்னாள்.

"உன்கிட்ட ஒரு அரை மணி நேரமாவது பேசனும். நான் சாப்ட்டுட்டு வரேன்".

போனை துண்டித்தான். 

ஸ்வேதா அழத் தொடங்கினாள். தன்னை சுற்றி என்ன நடக்கிறது? தான் எங்கே இருக்கிறோம் என்பதே அவளுக்கு மறந்து போனது. அவளால் நடக்க கூட முடியவில்லை. யாரோ அவளைப் பிடித்து தள்ளுவது போல் உணர்ந்தாள்.

காதல் ஒரு மனிதனை இந்த அளவிற்கா பாடு படுத்தும்? தான் எங்கு இருக்கிறோம் என்பதையே மறக்கும் அளவிற்கு அவளுக்கு அப்படி என்ன பிரச்சனை? எதை நினைத்து அவள் இப்படி தவிக்கிறாள்?

ஒருவனை ஒன்பது வருடங்களாய் மனதில் சுமந்து, கடந்த ஐந்து மாதங்களாக கணவனாய் நினைத்து வாழ்ந்து வந்தவளுக்கு இப்படித்தான் நேருமோ? இந்த மயக்கம், தவிப்பு எல்லாம் அவனுக்கும் இருக்குமா? இல்லை அவன் குடும்பத்திற்காக ஏற்க்கனவே மயங்கி விழுந்துவிட்டானா? அவன் குடும்பத்திற்காக மயங்கியிருந்தால் ஸ்வேதாவின் நிலை என்னவாகும்? அவன் என்ன சொன்னான் என்பதை அறிவதற்குள்ளேயே மயக்கம் வருபவளுக்கு அவன் அவளை ஏமாற்றி விட்டால் என்ன செய்வாள்?

பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு ராஜாவிடமிருந்து அழைப்பு வந்தது.   

"சாப்டியா?" ராஜா கேட்டான். 

"நீ விஷயத்த சொல்லுடா. இப்படி உயிரை வாங்காத". ஸ்வேதா கோவத்தில் கத்தினாள்.

ராஜா முன் தினம் என்ன நடந்தது என்பதை அவளிடம் கூறினான். 

"நேத்து மணி அண்ணனுக்கு போன் பண்ணேன். இங்க நீ பொலம்பிகிட்டே இருக்கிற. அவன் அங்க என்ன பண்றான்னு தெரிஞ்சுக்கனும்ல. அதான் மணி அண்ணாட்ட கேக்கலாம்னு நினச்சு அவங்களுக்கு போன் பண்ணேன். 

நான் போன் பண்ணும் போது மணி அண்ணா ராகுல் வீட்லதான் இருந்தாங்க. அவங்க கிட்ட பேசிட்டு இருக்கும்போது ராகுல் போனை புடிங்கி பேசினான்".

"என்னடா பேசினான்?" ஸ்வேதாவின் குரலோடு உடலும் சேர்ந்து நடுங்கியது.

"வேற என்ன சொல்ல போறான்?

அவன் வீட்டுக்கு போனதும், நான் அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிருக்கான். உடனே எல்லாரும் அழ ஆரமிச்சுட்டாங்கலாமா. அவங்க அம்மாவுக்கு கேன்சர் இருக்குதோன்னு டாக்டர் சந்தேகப் படுறாங்கலாமா.  அப்பாவுக்கும் உடம்பு சரி இல்லையாமா"

ஸ்வேதா குறுக்கிட்டாள்.

"என்னடா இது? நாங்க லவ் பண்றதாலையா அவங்களுக்கு கேன்சர் வரும்? இவங்க வீட்ல எல்லாரும் அழுறாங்க. எங்க வீட்ல விஷயம் தெரிஞ்சா ஸ்வீட் செஞ்சு கொடுத்து என்ன கொஞ்சுவாங்களா? என்னடா இது? அவன் அப்பாவுக்கு எழுபது வயசாகுது. இந்த வயசில உடம்பு எப்படி நல்லா இருக்கும். கண்டிப்பா ஏதாவது பிரச்சன பண்ணிட்டு தான் இருக்கும். இதெல்லாம் தெரிஞ்சு தானடா என்ன லவ் பண்ணான். இப்போ எப்படி இதெல்லாம் காரணமா சொல்றான்?" அழுது கொண்டே கேட்டாள்.

ராகுல் வீட்டிற்கு போவதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை தன் வாழ்க்கை முக்கியம். அது ஸ்வேதாவுடன் தான் அமைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தான். இந்த காதலினால் அவன் அப்பா உயிருக்கு ஆபத்தே என்றாலும் அதை தாங்கிக் கொள்ள வேண்டும். ஸ்வேதாவிற்கு துரோகம் செய்து விட கூடாதென சொல்லி வந்தான். வீட்டில் என்ன பிரச்சனைகள் வந்தாலும் சரி, அதற்காக ஸ்வேதாவை விட்டு கொடுக்க முடியாது என்று சொல்லி வந்தான்.

"நான் அவன்கிட்ட கேட்டேன்டி. நீ வீட்டுக்கு போனதில இருந்து என்ன நடந்துதுன்னு தெளிவா சொல்லுன்னு சொன்னேன். அதுக்கு அவன் என்னால இப்போ எதுவும் சொல்ல முடியாது. ரொம்ப நேரம் என்னால பேச முடியாது. என்ன ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காங்க. இங்க இருந்து எப்படி வெளில வரதுனே தெரியலன்னு சொன்னான்". ராஜா சொன்னான்.

"ஹவுஸ் அரெஸ்ட்டா? இவன் என்ன பொண்ணா? வீட்ல அடச்சு வைக்க? ச்சீ.. இவன் ஏன்டா இப்படி இருக்கான்? வேற என்ன சொன்னான்?".

"வீட்ல வேலைய ரிசைன் பண்ண சொன்னாங்கலாமா. இத பத்தி மேனேஜர் கிட்ட பேசிருக்கான். அவருக்குதான் உங்க மேட்டர் தெரியுமே. சோ எதுவா இருந்தாலும் நீ சென்னை வந்தப்பறம் பேசிக்கலாம். மொதல்ல நீ சென்னை கிளம்பி வான்னு சொல்லிட்டாராமா".

ராகுல், ஸ்வேதா இருவரின் அலுவலகத்திலும் அனைவருக்குமே இவர்களின் காதல் விஷயம் தெரியும். ராகுலின் மேனேஜர் இதற்கு பெரும் ஆதரவாக இருந்தார். இவர்கள் ஒன்று சேர அவரே ராகுலின் வீட்டில் பேசுகிறேன் என்று கூட சொன்னார். யாரோ ஒருவர் இவர்கள் ஒன்று சேர வேண்டுமென நினைக்கிறார். ஆனால் காதலித்தவனுக்கு அந்த அக்கறை இல்லை.

"ஹே இவனுக்கென்ன பைத்தியமா? எதுக்குடா வேலைய ரிசைன் பண்ணனும்? வேலைய விட்டுட்டு என்ன பண்ண போறானாமா? அவன் அப்பா காசுல சாப்ட்டுட்டு வீட்லயே படுத்து தூங்கலாம்னு முடிவு பண்ணிட்டானா? இவனுக்கு கடவுள் அறிவையே குடுக்கலையா? வீட்ல என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டுவானா? அவன் அப்பா இவன சாக சொன்னா செத்துருவானா?". ஸ்வேதா கோவத்தில் பொரிந்து தள்ளினாள்.

"அவன் அப்பா சொன்னா அதையும் செஞ்சாலும் செய்வான்.

அவ எப்படி இருக்கான்னு கேட்டான். 

அவ எப்படி இருந்தா உனக்கென்ன, நீ அவல கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா சொல்லு. அவ எப்படி இருக்கான்னு சொல்றேன்னு சொன்னேன். 

நான் வீட்ல பேச வேண்டிய எல்லாம் பேசிட்டேன். இத அவகிட்ட சொல்லிரு. இல்லைனா நான் எதுவும் பேசலைன்னு என்ன தப்பா நினைப்பான்னு சொன்னான். 

நீ என்ன அவகிட்ட நல்ல பேர் வாங்கலாம்னு நினைக்கிறியா? கண்டிப்பா அவகிட்ட இத சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.

அப்பறம் அவள கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு தான் நினைக்கிறேன்னு சொன்னான்டி".

இதைக் கேட்டதும் மீண்டும் ஸ்வேதாவிற்கு மயக்கம் வந்தது. தேம்பி தேம்பி அழுதாள்.

"நீ இல்லைனா அவ கண்டிப்பா செத்து போயிருவா. உன் அம்மா, அப்பா இப்போ மானம், மரியாதனு பாக்குறாங்க. அவ செத்துட்டான்னா அடுத்த நிமிஷம் போலீஸ் உங்க வீட்டு வாசல்ல நிக்கும். அப்போ மட்டும் உங்க மானம், மரியாத போகாதான்னு கேட்டேன்".

"அதுக்கு அவன் என்ன சொன்னான்?" அழுது கொண்டே கேட்டாள்.

"அவன் ஒன்னுமே பேசலடி. நான் அவன்கிட்ட சொல்லிட்டேன். வீட்ல இருந்து வெளில வந்ததும் போன் நம்பர மாத்திரு. பிரண்ட்ஸ் யாரையும் காண்டக்ட் பண்ணாத. எனக்கும் கால் பண்ணாதன்னு சொல்லிட்டேன்".

ஸ்வேதா எதுவும் பேசவில்லை. அழுகையை அடக்க முயற்ச்சித்தாள்.

 ராகுலின் அண்ணன் எப்போது அவன் வீட்டு வாசலில் வந்து நின்றாரோ அப்பொழுதே அவன் தடுமாறிப் போனான். அண்ணனை பார்த்ததற்கே அப்படி என்றால், அப்பாவை பார்த்ததும் மனது மாறியதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?

குடும்பத்தின் மீது உயிராய் இருப்பவன் எதற்காக காதலிக்க வேண்டும்? அவர்கள் சொல்லும் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே? எதற்காக இப்படி  இரட்டை வேடம் போட வேண்டும்? அவனுக்கு தைரியம் இல்லை என்று எப்படி நினைக்க முடியும்? ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்கும் அளவிற்கு அவனுக்கு தைரியம் இருக்கிறதே. எத்தனை சுலபமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையை சூறையாடிவிட்டு இப்படி வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறான். குத்திக் குடையும் அவன் மனசாற்றிக்கு பதில் சொல்லும் அளவிற்கு அவனுக்கு தைரியம் இருக்கிறதே. இவனா கோழையாக இருப்பான்? கண்டிப்பாக இவன் அழுத்தம் பிடித்தவனாகத்தான் இருப்பான்.

தன் தோழிக்கு பிரச்சனை என்று ராஜா எத்தனை முயற்ச்சிகள் எடுத்து வருகிறான். ஆனால் காதலித்த பெண்ணைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் ராகுல் எத்தனை அமைதியாக வீட்டிற்குள் கிடக்கிறான். இவன் காதல் எத்தனை சிறந்ததாக இருக்க முடியும்.

அம்மாவின் முந்தானையையும், அப்பாவின் வேஷ்டியையும் பிடித்துக் கொண்டு திரிபவன் எதற்காக ஸ்வேதாவின் துப்பட்டாவை பிடித்துக் கொண்டு திரிந்தான்? அவளிடம் அவன் அப்படி எதைத்தான் எதிர்பார்த்து பழகினான்? 

"என்னடி எதுவும் சொல்ல மாட்டேங்கிற?"

அவளிடமிருந்து பதில் வரவில்லை.

"ஏதாவது சொல்லு ஸ்வேதா"

"என்னடா சொல்றது?". அழுகையை அடக்க முயற்ச்சித்து திக்கி, திணறி பேசினாள்.

"ஸ்வேதா நீ அழுதுரு. உன் மனசில என்ன இருக்குதுன்னு சொல்லி அழுதுரு". அவளின் அமைதி ராஜாவை கொஞ்சம் பயமுறுத்தியது.

"டேய். எனக்கு தல சுத்துதுடா. என்ன பேசுறதுன்னு தெரியல. எனக்கு ஒன்னும் புரியல. நான் வைக்கிறேன்". ஏதோ உளறி விட்டு போனை துண்டித்தாள்.

சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினாள். அவளுக்கு அழ மனமில்லை. அழுகையை அடக்கினாள். அதனால் தானோ என்னவோ அவளுக்கு இன்னும் அதிகமாக தலை சுற்றியது.

ராகுல் இல்லாமல் எதற்காக வாழ வேண்டும். காதல் என்ற பெயரில் ஒருவனோடு ஊர் சுற்றிவிட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்வதா? இனி தனக்கு வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்தாள்.

ஸ்வேதா சாக துணிந்தாள்.

எப்படி சாவது? அவள் இறந்த பின் இந்த உலகம் இதற்கு ஒரு கட்டுக்கதை கட்டுமே. எவனிடமோ ஏமாந்து விட்டாள். அதனால் தான் உயிரை மாய்த்துக் கொண்டாள் என்று பேசுமே. இதைத் தாங்கும் சக்தி தன குடும்பத்திற்கு இருக்குமா என்று யோசித்தாள்.

ஸ்வேதா கிராமத்து சூழலில் வளர்ந்தவள். அவள் சிட்டிக்கு வந்த பின் அடிக்கடி உடலில் ஏதேனும் பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்தது. தற்போது அவளுக்கு பெரும் தொந்தரவாக இருப்பது சைனஸ். எப்பொழுதும் அவளுக்கு தலை வலி இருந்து கொண்டே இருக்கும். அதற்காக இரண்டு மாதத்திற்கு முன்பு தான் ஹோமியோபதி ட்ரீட்மென்ட் எடுக்க ஆரமித்தாள். தனக்கு உடலில் ஏதேனும் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இதைத் தாங்கிக்கொண்டு தன்னால் வாழ முடியவில்லை என்று காரணம் காட்டலாமா என்று யோசித்துக் கொண்டே அவள் அம்மாவிற்கு லெட்டர் எழுத ஆரம்பித்தாள்.

"அம்மாவிற்கு,

முதலில் என்னை மன்னிக்கவும்." அழுகையை அடக்க முயற்சித்தும் முடியாமல் அழுதுகொண்டே எழுதினாள். தன் அம்மாவின் நிலையை நினைக்கவே அவளுக்கு பரிதாபமாய் இருந்தது.    

முதல் வரி எழுதத்   தொடங்கியதும் ராஜாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

"என்னடி பண்ற? நீ என்ன முடிவெடுத்துருக்கிற?". ராஜா இவள் சாவதற்கு முடிவெடுத்திருக்கிறாள் என்பது தெரியாமல் கேட்டான்.

"நான் செத்து போயிறேன்டா. அவன் இல்லாம என்னால வாழ முடியாது. அவன் ஏன்டா என்ன நம்ப வச்சு ஏமாத்திட்டான்?". மீண்டும் அழுகையை அடக்க முயன்று திணறிக்கொண்டே பேசினாள்.

"அய்யய்யோ. என்னடி சொல்ற?"

"என்னால முடியலடா. இதுக்கு மேலயும் என்னால வாழ்க்கைல கஷ்டப்பட முடியாது. நான் உயிரோட இருந்தாலும் அவன் என்ன நிம்மதியா வாழ விட மாட்டான். அவன்தான்டா என்கிட்ட சொன்னான். ரெண்டு பெரும் சேர்ந்து வாழனும் இல்ல சேர்ந்து சாகனும்னு. அவன் கண்டிப்பா சாக மாட்டான். அவனுக்கு அந்த தைரியம் கிடையாது. என் காதலுக்கு நான் உண்மையா இருக்கனும்டா. நான் செத்துறேன். இப்போ அம்மாவுக்கு லெட்டர் எழுதிட்டு இருக்கேன். ஈவினிங் வீட்டுக்கு போகும் போது  ஏதாவது வாங்கிட்டு போகணும்". ஸ்வேதா அழுதாள்.

"ஏன்டி இப்படி பண்ற? உனக்கு நான்தான்டி கடைசியா கால் பண்ணிருக்கேன். உனக்கு ஏதாவது ஆச்சுன்னா மொதல்ல என்னத்தான்டி புடிப்பாங்க. எனக்கே வாழ்க்கைல ஆயிரம் பிரச்சனை இருக்கு. இப்போ நீ வேற என்ன போலீஸ்ல மாட்ட வைக்க போற. நீ ஏதாவது பண்ணிகிட்டா உனக்கு மட்டும் பிரச்சனை இல்ல. நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்குமே பிரச்சனை ஆகும்". ராஜா புலம்பினான்.

தன் தோழியை காப்பாற்ற என்னவெல்லாம் பேசுகிறான்.

ஸ்வேதா யோசித்தாள்.

"நீ இனிமே இந்த நம்பருக்கு போன் பண்ணாதடா. என்னால யாருக்கும் பிரச்சன வேண்டாம். உனக்கு ஒரு நம்பர் தர்றேன். இனிமே அந்த நம்பருக்கே போன் பண்ணு". சொல்லிவிட்டு ராகுல் வாங்கி கொடுத்த நம்பரை ராஜாவிற்கு கொடுத்தாள்.

"நீ அந்த நம்பருக்கு இப்போ கூப்டு". சொல்லிவிட்டு தன் மொபைல அணைத்து தூக்கி எறிந்தாள்.

ராகுல் வாங்கிக் கொடுத்த சிம் கார்டு போட்டிருக்கும் மொபைல கையில் எடுத்தாள்.  

ராஜா அவள் கொடுத்த புது எண்ணிற்கு அழைத்தான்.

"இப்போ நான் எதுவும் பண்ணிக்கலடா. உனக்காக என்னால இதத்தான் செய்ய முடியும். ஆனா கண்டிப்பா நான் உயிரோட இருக்க மாட்டேன். நான் வேலைய ரிசைன் பண்ண போறேன். கொஞ்ச நாள் தாத்தா, பாட்டி கூட இருக்கலாம்னு தோணுது. ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ அவங்க கூட இருந்துட்டு கண்டிப்பா நான் ஏதாவது பண்ணிப்பேன்டா". சொல்லிவிட்டு ஸ்வேதா அழுதாள்.

"சரி. நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்டுறேன்". ராஜா விடை பெற்றான்.

ஸ்வேதாவிற்கு மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடியது. ராகுல் தன்னுடன் பழகியதை எல்லாம்  ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்தாள். அவளை எப்படியெல்லாம் உருகி உருகி காதலித்தான். வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டி என்றுதானே அவளை அழைத்தான். உனக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று சொன்னானே. ஸ்வேதா அவனை முழுமையாக நம்பித்தானே அவனிடம் நெருங்கி பழகினாள். இவன் இப்படி பயந்துபோய், அவளை திருமணம் செய்வது கடினம் என்று யோசிக்கும் நிலை வருமென்று தெரிந்திருந்தால் அவனை அதிகமாக சந்தித்துக் கூட பேசியிருக்க மாட்டாளே. திருமணத்திற்கு முன் அவள் நிழலைக் கூட அவன் தொட அனுமத்திருக்க மாட்டாளே. இதற்காகத்தான் ராகுல் அவளை நம்ப வைத்து ஏமாற்றி விட்டானா?

ராஜா ஸ்வேதாவை திரும்ப அழைத்தான்.

"ஸ்வேதா. நீ ராகுல் கிட்ட பேசுறியா?"

"எப்படிடா?" ஸ்வேதா வியப்பாய் கேட்டாள்.

"நீ பேசுறியா? இல்லையா?"

"கண்டிப்பா பேசுறேன்"

"சரி கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் திரும்ப கூப்டுறேன்"

போன் துண்டிக்கப்பட்டது.



உண்மைக் கதை தொடரும்...